இந்தியாவின் மிகப்பிரபலமான ஜோடி விராட் கோலி - அனுஷ்கா சர்மா. இந்திய அணியின் கேப்டன் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடியை ரசிகர்கள் நாட்டின் பவர் ஜோடி என்று அழைக்கின்றனர்.

நடிகை அனுஷ்கா சர்மா, ஷாருக்கானின் "ரப் நே பனாடி ஜோடி" என்ற இந்தி திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அனுஷ்கா அறிமுகமானதே ஷாருக்கானின் திரைப்படத்தில்தான் என்பதால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். 

விராட் கோலியை திருமணம் செய்தபிறகும் தொடர்ந்து அனுஷ்கா திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள ஜீரோ என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஷாருக்கானுடன் அனுஷ்கா சர்மாவும் கலந்துகொண்டுவருகிறார். அதன் ஒருபகுதியாக செய்தியாளர்களை சந்தித்தபோது, எந்த கிரிக்கெட்டர் ஜீரோ ரன்னில் டக் அவுட்டாவதை பார்க்க விரும்புகிறீர்கள் என்று ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஷாருக்கான், இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நான் ஏதேனும் பேசினால், அனுஷ்காவின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அவர் மிஸ்ஸஸ் கிரிக்கெட்டர் என்று நகைச்சுவையாக கூறினார். ஷாருக்கான் இப்படி சொன்னதும் அந்த இடமே கலகலப்பானது. அனைவரும் சிரித்தனர்.