இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை, இன்றுகாலை காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அனுமதிக்கப்பட்டன.
ஆன்லைனில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் www.bookmyshow.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார். ஆனால் இன்றுகாலை தொடங்கிய ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
டெஸ்ட் போட்டிதானே, மெல்ல டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்றிருந்தவர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. சென்னையில் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அவ்வளவாக நடைபெறாததாலும் மூன்று வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டி நடைபெறுவதாலும் இந்தமுறை ஆன்லைன் டிக்கெட் விற்பனை படுஜோராக நடந்துள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 13 ஆயிரத்து 100 இருக்கைகளைக் கொண்ட ஐ, ஜே, கே என்ற 3 புதிய பார்வையாளர் மாடங்கள் கட்டப்பட்டன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி இந்த புதிய மாடங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இந்தப் பிரச்னை பலவருடங்களாக இழுத்தடித்துக்கொண்டு வருகிறதே தவிர இன்றுவரை இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் சென்னை ரசிகர்கள் இழந்த போட்டிகள் நிறைய. இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்த மூன்று மாடங்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் டிக்கெட் விற்பனையில் அந்த மூன்று மாடங்களும் இடம்பெறவில்லை. இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளே ஒதுக்கப்பட்டதால் டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்கள் தயாராக இருந்தும் அவர்களுக்கான இருக்கை வசதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்படுத்தித் தரவில்லை.
மேலும் இந்தளவுக்கு ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட சென்னைதான் இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் குறைந்த டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ளது. 2006 முதல் இந்த வருடம் வரை சச்சினே விளையாடினாலும் கூட்டம் சேராத மொஹாலி கிரிக்கெட் மைதானம்தான் அதிகளவில் அதாவது 7 டெஸ்ட் போட்டிகளை நடத்தி முதலிடத்தில் உள்ளது.
ஆனால் எப்போது டெஸ்ட் போட்டி நடைபெற்றாலும் அதிகக் கூட்டத்தைச் சேர்க்கும் சென்னை சேப்பாக்கம் மைதானமோ கடந்த 10 வருடங்களில் மூன்று டெஸ்ட் போட்டிகளை மட்டும் நடத்தி கடைசி இடத்தில் உள்ளது.
