sehwag supports hardik pandya
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஜொலிக்கத்தவறிய பாண்டியாவிற்கு ஆதரவாக சேவாக் குரல் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் நீண்டகால ஆல் ரவுண்டர் கனவை நிறைவேற்றியவர் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பாண்டியா, இந்திய அணியின் வரப்பிரசாதமாகவே பார்க்கப்பட்டார்.
ஆனால், நடந்துவரும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் சொல்லும்படியாக இல்லை. முதல் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர்கள் சரிய, நிலைத்து நின்று அருமையாக ஆடிய பாண்டியா, 93 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால், அதன்பிறகு ஆடிய 4 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட்டுகளை எடுக்கவும் திணறிவருகிறார். அதனால் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுப்பது குறித்த பேச்சுகள் எழ தொடங்கியுள்ளன.
இந்நிலையில், பாண்டியாவிற்கு முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சேவாக், கிரிக்கெட் வாழ்க்கையை பாண்டியா இப்போதுதான் தொடங்கியுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட நிறைய அனுபவம் தேவை. அதன்பிறகே டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பாண்டியாவிற்கு தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டால், பாண்டியா எதிர்காலத்தில் ஜொலிப்பார். கபில் தேவ் போன்ற வீரராக பாண்டியா உருவாவதற்கு கண்டிப்பாக சில ஆண்டுகள் ஆகும் என சேவாக் தெரிவித்தார்.
