இந்திய அணியின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தும் அதற்கு சேவாக் நன்றி தெரிவித்த விதமும் சுவாரஸ்யமான சம்பவமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான மற்றும் மிரட்டலான தொடக்க ஜோடியாக வலம்வந்தது சச்சின் டெண்டுல்கர் - வீரேந்திர சேவாக் ஜோடி. இருவரும் இணைந்து எதிரணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி முதல் 10 ஓவர்களிலேயே போட்டியின் போக்கை மாற்றிவிடுவர். 

இருவரும் நல்ல தொடக்க ஜோடி என்பதை கடந்து நல்ல நண்பர்கள். பொதுவாக தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்களுக்கு இடையே களத்திற்கு வெளியேயும் நல்ல புரிதலும் நட்பும் இருக்கும். சச்சின் - சேவாக்கிற்கு இடையேயும் அது இருந்தது.

சேவாக்கின் அதிரடியை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் என பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். சுயநலம் இல்லாத வீரர், பந்தை பார்த்து அடிப்பது மட்டும்தான் அவரது பேட்டிங் டெக்னிக்கே தவிர அதைக்கடந்து பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். 

எதிரணியை தனது அதிரடியால் நிலைகுலைய செய்துவிடுவார். அதிரடி மன்னன் சேவாக் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கங்குலி, ஹர்பஜன் உள்ளிட்ட பல வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த வாழ்த்து சற்றே வித்தியாசமானது. 

சேவாக்குடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சச்சின், 141.211416441116464 இந்த எண்ணை பதிவிட்டு, இது ஜிபிஎஸ் லோகேஷன் அல்ல. என் நண்பர் சேவாக் எதிராணியின் பவுலிங்கை இப்படித்தான் விளாசுவார் என்று கிரியேடிவாக பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

இதைப்பார்த்த சேவாக் சும்மா விடுவாரா? சும்மாவே பயங்கர கிரியேடிவாக டுவீட் செய்பவர் சேவாக். சச்சினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த போட்ட டுவீட்டில், இன்ஃபினிடி(முடிவிலி) குறியீட்டை பதிவிட்ட சேவாக், இது வெறும் குறியீடு அல்ல. இப்படித்தான் நமது கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ரன்களை குவிப்பார். உங்களது கிரியேடிவான வாழ்த்துக்கு நன்றி சச்சின் என்று சேவாக் பதிவிட்டுள்ளார்.