பாகிஸ்தான் வீரர் அசார் அலியை ஆஸ்திரேலிய அணி ரன் அவுட்டாக்கிய விதத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என வென்றது.

இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் ரன் அவுட் ஆன விதம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரை ரன் அவுட் செய்த முறை உண்மையான விளையாட்டுக்கான ஸ்பிரிட் கிடையாது என்ற குரல் எழுந்துள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது, சிடில் வீசிய 53வது ஓவரின் 2வது பந்தை தேர்டு மேன் திசையில் அடித்துவிட்டு ஓடினார் அசார் அலி. பந்து வேகமாக பவுண்டரியை நோக்கி ஓடியது; அந்த பந்தை ஃபீல்டரால் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், பந்து பவுண்டரிக்கு ஓடிவிட்டது என நினைத்து, ரன் ஓடுவதை பாதியில் நிறுத்திவிட்டு நடு பிட்ச்சில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் பந்து பவுண்டரி லைனை தொடவில்லை. பவுண்டரி கோட்டிற்கு முன்னதாக நின்றுவிட்டது. அதனால் வேகமாக பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் ஸ்டார்க் வீசினார். கீப்பர் டிம் பெய்ன் ரன் அவுட் செய்தார்; ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை கொண்டாடினர். எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த அசார் அலிக்கு அம்பயர் விளக்கினார். இதையடுத்து விரக்தியில் தலையில் அடித்துக்கொண்டு வெளியேறினார் அசார் அலி.

தான் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் குறித்து அசார் அலியே ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் அது உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி செய்த சம்பவம் ஒன்றுடன் ஒப்பிடவும் செய்துள்ளார் ஸ்டைரிஸ்.

கடந்த 2006ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குமார் சங்ககரா பந்தை அடித்துவிட்டு ரன் ஓடுவார். அந்த ரன் அவரது சதத்திற்கான ரன். அதனால் மறுமுனையில் இருந்த முரளிதரன் கிரீஸை தொட்டுவிட்டு, சங்ககராவின் சதத்தை அவருடன் கொண்டாடுவதற்காக செல்வார். அதற்குள்ளாக கிவிஸ் பந்தை பிடித்து வீச, அதை பிடித்து மெக்கல்லம் ரன் அவுட் செய்வார். அம்பயர் அதற்கு அவுட்டும் கொடுத்துவிடுவார். இந்த சம்பவம் முரளிதரன் மற்றும் சங்ககராவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். அந்த வீடியோவை பகிர்ந்த ஸ்டைரிஸ், இதுபோன்ற ரன் அவுட்கள் தவறான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று விமர்சித்துள்ளார்.