இந்திய அணிக்கு சாதகமாக ஆசிய கோப்பை அட்டவணை மாற்றியமைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது சிறுபிள்ளைத்தனமாக குற்றம்சாட்டியுள்ளார். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில், இந்திய அணி, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங்குடன் ஆடியதற்கு மறுநாளான நேற்று, பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கிடையே நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணிக்கு மட்டும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும் வகையில் ஒருதலைபட்சமாக கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டதாகவும் இதில் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு இருக்கலாம் எனவும் சர்ஃபராஸ் அகமது குற்றம்சாட்டினார். 

அபுதாபியை விட துபாய் மைதானம் பெரிது என்பதால், அதிகமான ரசிகர்கள் போட்டியை கண்டு களிப்பதற்காகவே இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடத்தப்படுவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கமளித்திருக்கிறார். 

சர்ஃபராஸ் கானின் பேச்சு முதிர்ச்சியற்ற வகையில் உள்ளது. இந்திய அணி அடுத்தடுத்த நாட்களில் இரண்டு போட்டிகளில் ஆடியது. அவ்வளவு நியாயமான ஆளாக இருந்தால், இந்தியாவிற்கு தொடர்ந்து இரண்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராகவும் அவரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் குரல் கொடுத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, உடனடியாக ஆசிய கோப்பையில் கலந்துகொண்டு ஆடிவருகிறது. 

அதுமட்டுமல்லாமல் 18ம் தேதி ஹாங்காங்குடன் மோதிய இந்திய அணி, 19ம் தேதி(நேற்று) பாகிஸ்தானுடன் மோதியது. ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் இரண்டு போட்டிகளில் ஆடியது இந்திய அணி. இரண்டிலுமே வெற்றியும் கண்டது. ஆனால் இந்திய அணி ஒருமுறைகூட தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒருநாள் போட்டியில் ஆடுவது குறித்து எந்தவிதமான எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுதொடர்பாக சிறுபிள்ளைத்தனமாகவும் பேசவில்லை. ஒருவேளை பாகிஸ்தானிடம் தோற்றிருந்தால் கூட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அடுத்தடுத்த நாட்களில் போட்டிகளில் ஆடியதை தோல்விக்கு காரணமாக குறிப்பிட்டிருக்க மாட்டார்.

இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுவதை விமர்சனம் செய்யத்தெரிந்த பாகிஸ்தான் கேப்டனுக்கு, இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆடியது கண்ணுக்கு தெரியவில்லையா? அதில் உள்ள சிக்கல்கள் புரியவில்லையா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.