ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில், இந்திய அணி ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங்குடன் ஆடியதற்கு மறுநாளான நேற்று, பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கிடையே இந்த போட்டிக்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, ஆசிய கோப்பை தொடருக்கான முதலில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில் இந்திய அணி சில போட்டிகளில் அபுதாபியில் ஆடுமாறு தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் மாற்றப்பட்ட கால அட்டவணையில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் ஆடுகிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

போட்டி என்பது அனைவருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். அதில் இந்தியா, பாகிஸ்தான் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. இதில், ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு இருக்கக்கூடும்  என சர்ஃபராஸ் அகமது குற்றம்சாட்டியுள்ளார். 

சர்ஃபராஸ் அகமதுவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், அபுதாபி ஸ்டேடியத்தை விட துபாய் ஸ்டேடியம் பெரிது. இதில், சுமார் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்க முடியும். எனவே அதிகமான ரசிகர்கள் போட்டியை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா ஆடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுகின்றன என விளக்கம் அளித்தார்.