ஹனுமா விஹாரியின் பேட்டிங் டெக்னிக் அபாரமாக இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மிக மோசமாக உள்ளது. தொடக்க வீரர்களால் பயனே இல்லை எனும் அளவிற்கு உள்ளது. இங்கிலாந்திலும் மோசமாக ஆடினர், தற்போது ஆஸ்திரேலிய தொடரிலும் படுமோசமாக சொதப்பிவருகின்றனர். 

முரளி விஜயும் ராகுலும் அத்தி பூத்தாற்போல ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ஓரளவிற்கு ஆடுகின்றனர். இதே நிலை நீடிப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல. தொடக்க ஜோடி மிகவும் பிரச்னையாக உள்ளது. அதேநேரத்தில் மிடில் ஆர்டர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் பொறுப்பாக ஆடுகின்றனர். 

புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் சீனியர் வீரர்கள். ஆனால் ஹனுமா விஹாரி இங்கிலாந்துக்கு எதிராகத்தான் அறிமுகமே ஆனார். அதில் சிறப்பாக ஆடினார். இதுதான் அவருக்கு முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என்றபோதிலும் இரண்டாவது போட்டியில் எந்தவித பயமும் பதற்றமும் இன்றி சிறப்பாகத்தான் ஆடினார். 

ஹனுமா விஹாரியின் பேட்டிங் குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஆஸ்திரேலிய சூழலில் பேட்டிங் ஆடுவது எளிதான காரியம் அல்ல. எனினும் ஹனுமா விஹாரி இங்கு அருமையாக பேட்டிங் ஆடுகிறார். அவரது பேட்டிங் டெக்னிக் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. பதற்றப்படாமல் நிதானமாக களத்தில் நின்று சிறப்பாக ஆடுகிறார். இவர் முதல் மூன்று வரிசைகளில் இறங்கி ஆடுவதற்கு தகுதியான மற்றும் பொருத்தமான வீரர் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் புகழ்ந்துள்ளார்.