இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி, திறமையான இளம் வீரர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளது. 20 வயதே ஆன சாம் கரன் தான் அவர். முதல் போட்டியிலும் இரண்டாவது போட்டியிலும் அபாரமாக ஆடிய சாம் கரன், மூன்றாவது போட்டியில் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை கொடுத்த சாம் கரன், நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர் மீது அணி வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்காத அளவிற்கு முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் குவித்த சாம் கரன், விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 37 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 37 ரன்களுடன் களத்தில் இருக்கிறார் சாம் கரன். 

இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக 8வது வரிசையில் களமிறங்கி, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சாம் கரன் படைத்துள்ளார். சாம் கரன் இந்த தொடரில் இதுவரை 242 ரன்களை குவித்துள்ளார். 8ம் வரிசையில் களமிறங்கி இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் குவிக்கப்பட்ட அதிகமான ரன் இதுதான்.

இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் டேனியல் வெட்டோரி, 220 ரன்கள் குவித்ததே, 8ம் வரிசை வீரர் இந்தியாவிற்கு எதிராக குவித்த அதிக ரன்னாக இருந்தது. தற்போது அதை முறியடித்து சாம் கரன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 24 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார் சாம் கரன். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்தார். நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் எடுத்த சாம் கரன், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார்.