
முழங்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்த சாய்னா நெவால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சீன ஓபன் பாட்மிண்டன் போட்டில் மீண்டும் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் கூறியதாவது: “அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த சாய்னா, கடந்த வாரம் முதல் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் சீன ஓபன் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.
இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்னா, சீன ஓபன் போட்டியில் பங்கேற்பதால் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் அந்தக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது” என்று ஹர்வீர் சிங் கூறினார்.
உலக பாட்மிண்டன் சம்மேளன தரவரிசையில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, கடந்த ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். எனினும், 2014-ஆம் ஆண்டில் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினராக சாய்னா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, உலக பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் பால் எரிக் ஹோயர் மற்றும் செயலர் தாமஸ் லுன்ட் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
