அனைத்து காலத்துக்கும் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 1989ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 வரை 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடியவர் சச்சின் டெண்டுல்கர் தான். 

சர்வதேச அளவில் அதிக ரன்கள், அதிக சதங்கள்(100 சர்வதேச சதங்கள்) என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அசைக்க முடியாத கிரிக்கெட் ஜாம்பவான். அவரது இடத்தை வேறு எந்த வீரராலும் நிரப்பவே முடியாது.

1989ம் ஆண்டு தனது 16வது வயதில் இந்திய அணியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், அதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணிக்காக களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்துள்ளார். இந்த தகவல் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1987ம் ஆண்டு தனது 14வது வயதில் பாகிஸ்தான் அணிக்காக ஃபீல்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார் சச்சின் டெண்டுல்கர். 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக 1987ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்தது. அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொன்விழா ஆண்டு என்பதால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஜனவரி 20-ம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது. 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக அது நடத்தப்பட்டது. அந்த போட்டியில் தான் பாகிஸ்தான் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் ஃபீல்டிங் செய்தார். 

இதுகுறித்த நினைவை பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் நண்பர் மார்கஸ் கூட்டோ, அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது பாகிஸ்தான் வீரர்கள் நால்வர் திடீரென ஓய்வறைக்கு சென்றுவிட்டனர். அதனால் அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், இந்திய கேப்டன் ஹேமந்திடம் ஃபீல்டர்கள் குறைவாக உள்ளதால் இரண்டு ஃபீல்டர்களை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சச்சின், இந்திய கேப்டன் ஹேமந்திடம் நான் ஃபீல்டிங் செய்யட்டுமா என மராத்தியில் கேட்டார். அதற்கு ஹேமந்த் இசைவு தெரிவிக்கும் முன்னரே களத்திற்குள் சென்றுவிட்டார் சச்சின். சச்சினுடன் குஸ்ரு என்ற வீரரும் ஃபீல்டிங் செய்ய அனுப்பப்பட்டனர். 

அப்போது பவுண்டரி லைனில் சச்சினை ஃபீல்டிங் செய்ய வைத்தனர். சுமார் 30 நிமிடங்கள் பாகிஸ்தான் அணிக்காக ஃபீல்டிங் செய்தார் சச்சின். போட்டி முடிந்து ரயிலில் வீடு திரும்பும்போது, தன்னை பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்ய வைத்ததால் கேட்ச் பிடிக்க முடியாததை நினைத்து என்னிடம் மிகவும் வருத்தப்பட்டார் சச்சின். லெக் திசையில் டீப் மிட்விக்கெட்டில் நிறுத்தி இருந்தால் கேட்ச் பிடித்திருப்பேன் என்று என்னிடம் கூறினார் என்று சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்காக ஃபீல்டிங் செய்த தருணத்தை பகிர்ந்துள்ளார் மார்கஸ்.