சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கே தொடக்க வீரர்களின் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்துவிட்ட இக்கட்டான நிலையில், களமிறங்கி அபாரமாக ஆடி சதமடித்த கோலி 123 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இது கோலியின் 25வது டெஸ்ட் சதம் மற்றும் 63வது சர்வதேச சதமாகும். இந்த சதத்தின் மூலம் விரைவாக 25 சதங்களை எட்டிய இரண்டாவது வீரர், அதிகமான சர்வதேச சதங்களை விளாசிய மூன்றாவது வீரர், கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் என பல சாதனைகளை படைத்தார் கோலி. 

கோலியின் இந்த சதம் இன்னொரு விதத்தில் மிக முக்கியமானது. 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் சதமடிக்கும் வீரர் கோலி. 1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 161 பந்துகளில் 114 ரன்களை குவித்தார். 

அதன்பிறகு 26 ஆண்டுகள் கழித்து பெர்த்தின் புதிய மைதானத்தில் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார்.