இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு விடுத்த கோரிக்கையை கிரிக்கெட் ஆலோசனை குழு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் ரமேஷ் பவார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மகளிர் டி20 உலக கோப்பையின் அரையிறுதிவரை முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மிதாலி ராஜும் ரமேஷ் பவாரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை ரமேஷ் பவார் முடித்து வைக்க நினைப்பதாக மிதாலி ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து இருவரிடமும் பிசிசிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது. அதன்பிறகு ரமேஷ் பவாரை அணியின் பயிற்சியாளராக நீடிக்க வைக்க பிசிசிஐ விரும்பவில்லை. ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிந்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழுவை கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்திய மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனத்திற்கான நேர்காணலை நடத்தி பயிற்சியாளரை தேர்வு செய்யுமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் நிர்வாகக்குழுவின் கோரிக்கையை கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் மறுத்துவிட்டதாக மும்பை மிரரில் செய்தி வெளியாகியுள்ளது. 

சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் பிசிசிஐ நிர்வாகக்குழுவிற்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், மகளிர் அணி பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்த மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு தான் ரவி சாஸ்திரியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. அந்த பணி முடிந்ததும் இந்த குழு வேறு எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனது குறிப்பிடத்தக்கது.