மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பத்து இரயில்வே வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 இலட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது இந்திய அணி.

இந்திய வீராங்கனைகள் உலகக் கோப்பையை நழுவவிட்டாலும், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இரயில்வே வீராங்கனைகளுக்கு நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வீராங்கனைகளை வெகுவாக பாராட்டினார்.

அப்போது, “பத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ.13 இலட்சம் வழங்கப்படும்” என அவர் அறிவித்தார்.

இரயில்வேயில் பணியாற்றி வரும் மிதாலி ராஜுக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது. அவர், முதன்மை கண்காணிப்பாளராக (விளையாட்டு) பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

ஆண்கள் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் நடத்தப்படுவது போல பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக உள்ளது.