Rome Masters players who get into next round
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் நேற்றைய ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜான் இஸ்னர், குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (3), 2-6, 7-6 (2) என்ற செட் கணக்கில் ஜான் இஸ்னர் கைப்பற்றி சிலிச்சை தோற்கடித்து வெற்றிக் கண்டார்.
ஜான் இஸ்னர் தனது அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார்.
அதேபோன்று அலெக்சாண்டர் தனது காலிறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுடன் மோதினார். இதில், 7-6 (4), 6-1 என்ற நேர் செட்களில் ரயோனிச்சை வீழ்த்தி அலெக்சாண்டர் வென்றார்
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப், எஸ்தோனியாவின் அனெட்டா கோன்டாவீட்டுடன் மோதி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றார்.
ஹேலப் தனது அரையிறுதியில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை சந்திக்கிறார்.
அதேபோன்று பெர்டென்ஸ் தனது காலிறுதியில், ஆஸ்திரேலியாவின் டேரியா கேவ்ரில்லாவுடன் மோதி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸ் - மார்க் லோபஸ் ஜோடியுடன் மோதியதில் 4-6, 7-6 (7), 10-9 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
போபண்ணா ஜோடி தங்களின் காலிறுதியில் பிரான்ஸின் பியர் ஹியூஸ்-நிகோலஸ் மஹத் ஜோடியை சந்திக்கிறது.
