ரோஹித் சர்மா மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்முக்கு வந்துவிட்டால் போட்டியையே மாற்றும் திறன் படைத்தவர் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு ஏற்கனவே தலைவலியாக இருந்த நிலையில், தற்போது மேலும் சிக்கலாகியுள்ளது. பிரித்வி ஷாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார், 6ம் வரிசையில் ரோஹித்தா ஹனுமா விஹாரியா போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் இருந்தன. 

இந்நிலையில், பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா காயமடைந்ததால் கண்டிப்பாக முரளி விஜயும் ராகுலும்தான் இறங்குவர் என்பது உறுதியாகிவிட்டது. அதிலும் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ஆடிய அனுபவம் பெற்ற பார்த்திவ் படேல் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்ற கருத்தும் உள்ளது. அப்படி பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டால் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்வி. 

விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா ஆகிய இருவருமே அணியில் இணைவர். இவற்றில் எது நடக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எனவே இவற்றிற்கெல்லாம் அணி குறித்த அறிவிப்பு வெளிவந்தால்தான் தெளிவு கிடைக்கும். 

ஆடும் லெவனில் ரோஹித் சர்மா கண்டிப்பாக இடம்பெற வேண்டுமென்பதே பல ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. இதற்கிடையே ராகுல் ஃபார்மில் இல்லாதது, ரஹானே பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாமல் திணறுவது ஆகியவை இந்திய அணிக்கும் இருக்கும் பிரச்னைகள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், ராகுல் ஒரு உயர்தர பேட்ஸ்மேன். ஆனால் டைமிங்கை மிக மோசமாக இழக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அவர் வரவில்லை. ரஹானேவை எடுத்துக்கொண்டால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருந்த வீரர் இல்லை அவர். அவரது கருத்துகள், பேச்சுகளில் அவர் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதேயில்லை. செய்யும் தவறை ஒப்புக்கொண்டு திருத்தினால்தான் சிறந்த பேட்ஸ்மேனாக வளரமுடியும். செய்த தவறுகளையே திரும்ப திரும்ப செய்யும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார் சஞ்சய்.

மேலும் ரோஹித் சர்மா குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ரோஹித் சர்மா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்க வேண்டும். 6ம் வரிசையில் களமிறங்கி பின்வரிசை வீரர்களுடன் ஆடி, இங்கிலாந்துக்கு பட்லர் செய்வதை இந்தியாவுக்கு ரோஹித்தால் செய்ய முடியும். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஃபார்முக்கு வந்துவிட்டால் போட்டியையே மாற்றக்கூடிய திறன் பெற்றவர் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.