ஒரு கேப்டனாக தனது அணுகுமுறை எல்லாமே தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அணியை சிறப்பாக வழிநடத்தி தனது தலைமைப்பண்பை நிரூபித்த ரோஹித் சர்மா, கவாஸ்கர், வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்றார். 

ரோஹித் சர்மா களத்தில் சில நேரங்களில் சாதுர்யமாக நடந்துகொள்வது, பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம், வீரர்களை கையாள்வது என அனைத்திலுமே கோலியை விட சிறப்பாகவே செயல்படுகிறார். 

இக்கட்டான நேரங்களில் ரோஹித் சர்மா டென்ஷனாகாமல் சூழலை நிதானமாக கையாண்டு, வீரர்களை முறையாக வழிநடத்தி, கைமீறி போகும் போட்டிகளில் மீண்டும் போட்டிக்குள் அணியை கொண்டுவந்து விடுகிறார் ரோஹித். ரோஹித்தின் அணுகுமுறை பாராட்டுகளை குவித்து வருகிறது. 

ஹாங்காங்கிற்கு எதிரான போட்டி, வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டி ஆகியவற்றில் எதிரணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியபோதும், மீண்டும் இந்திய அணியை போட்டிக்குள் கொண்டுவந்து வெற்றியை பெற வைத்திருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் அமைதியான மற்றும் நிதானமான அணுகுமுறையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பாராட்டியுள்ளார். 

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, தோனியின் கேப்டன்சியின் கீழ் பல ஆண்டுகள் ஆடியிருக்கிறேன். அவரது கேப்டன்சி அணுகுமுறை என்னிடம் எதிரொலிக்கிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நிறைய நேரம் இருக்கும். எனவே எதிரணி ஆதிக்கம் செலுத்தினாலும் கூட பொறுமையாக இருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இதை தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தோனி கேப்டனாக இருந்தபோது எந்தவொரு இக்கட்டான சூழலிலும் பதற்றமடைய மாட்டார். பொறுமையாக இருந்து சாதிப்பார். அவரது கேப்டன்சியின் கீழ் ஆடியிருப்பதால் அவரிடமிருந்துதான் இதையெல்லாம் நான் கற்றுக்கொண்டேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.