ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 14வது ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிராக கடுமையாக போராடி வென்ற இந்திய அணி, பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 34 ஓவர் வரை ஹாங்காங்கின் முதல் விக்கெட்டை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. அந்த அணியின் தொடக்க  ஜோடி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை குவித்தது. எனினும் அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை இழந்த ஹாங்காங் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆனால் அதற்கு நேர்மாறாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் 3 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் தொடக்க ஓவர்களை அருமையாக வீசி நெருக்கடி கொடுத்தனர். எனினும் ஷோயப் மாலிக் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி மூன்றாவது விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். எனினும் அந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் பிரேக் கொடுத்தார். அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 162 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

163 ரன்கள் என்ற எளிய இலக்கை 29 ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் பேசிய ரோஹித் சர்மா, கடந்த போட்டியில் செய்த தவறுகளிலிருந்து கற்ற பாடத்தால் அதை திருத்திக்கொண்டு ஆடினோம். இங்குள்ள(துபாய்) வெப்பமான சூழலை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினோம். முதல் 10 ஓவர்களுக்கு உள்ளாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது முக்கியமானது. பெரிய இன்னிங்ஸை ஆடக்கூடிய வீரர்கள் சிலர் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியளிக்க நினைத்தோம். ஸ்பின் பவுலர்களும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். பாபரும் மாலிக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, பார்ட்னர்ஷிப் அமைவது இயல்புதான். அதைப்பற்றி கவலைப்படமால் நமது திட்டப்படி செயல்பட வேண்டும் என விவாதித்தோம். அதன்படியே பவுலர்களும் செயல்பட்டனர் என ரோஹித் சர்மா தெரிவித்தார். 

எதிரணி வீரர்கள் சிறப்பாக ஆடும் நேரங்களில் மனதை தளரவிடாமல் மனவலிமையுடன் வீரர்களை ஊக்குவித்து வழிநடத்தி செல்வதுதான் சிறந்த கேப்டன்சி. அதை ரோஹித் சர்மா பெற்றுள்ளார் என்பதையே அவரது இந்த பேச்சும் அவரது செயல்பாடுகளும் உணர்த்துகின்றன. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியிலேயே அவரது கேப்டன்சியின் வலிமையை அறியமுடிந்தது.