வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மாவுக்காக ஒரு சாதனை காத்துக்கொண்டிருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா, டி20 போட்டியில் 4 சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். 

மேலும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, மெக்கல்லம், ஷோயப் மாலிக் ஆகியோரை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர்கள் மூவரையும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில்தான் ரோஹித் முந்தினார். 

தற்போது 2203 ரன்களுடன் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின் கப்டிலுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். மார்டின் கப்டில் 2271 ரன்களை குவித்துள்ளார். எனவே கப்டிலை முந்தி முதலிடத்தை பிடிக்க ரோஹித்துக்கு இன்னும் 69 ரன்கள் தேவை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்று நடக்க உள்ள கடைசி டி20 போட்டியில் 69 ரன்கள் அடித்தால் இன்றே கப்டிலை முந்தி முதலிடத்தை ரோஹித் பிடிக்கலாம். எனவே ரோஹித் இன்று 69 ரன்கள் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.