வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோரின் சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிக்க இன்னும் 186 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தொடரில் கோலிக்கு ஒரு சாதனை காத்திருப்பதைப் போலவே ரோஹித் சர்மாவிற்கும் ஒரு சாதனை காத்திருக்கிறது. 

ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். அலட்டிக்கொள்ளாமல் சிரமப்படாமல் தனது பேட்டிங் டெக்னிக்கின் மூலம் எளிதாக சிக்ஸர்கள் விளாசக்கூடியவர் ரோஹித் சர்மா. மிகக்குறைந்த போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் விளாசியவர் ரோஹித். 

சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களில் தோனிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். சச்சின், கங்குலி, யுவராஜ், சேவாக் போன்ற வீரர்களை எல்லாம் எளிதாக பின்னுக்கு தள்ளிவிட்டார் ரோஹித். 

502 இன்னிங்ஸ்களில் ஆடி 342 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்களில் தோனி முதலிடத்தில் உள்ளார். 302 இன்னிங்ஸ்களிலேயே 304 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ரோஹித் சர்மா அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பட்டியலில் தோனி, சச்சின், கங்குலி ஆகியோருக்கு அடுத்த நான்காவது இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. 

217 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்திலும் 195 சிக்ஸர்களுடன் சச்சின் இரண்டாமிடத்திலும் 190 சிக்ஸர்களுடன் கங்குலி மூன்றாமிடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா 186 சிக்ஸர்களுடன் நான்காமிடத்தில் உள்ளார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 10 சிக்ஸர்கள் விளாசினால் கங்குலி, சச்சினை முந்தி இரண்டாமிடத்தை ரோஹித் பிடித்துவிடுவார். தோனியின் சாதனையை இந்த தொடரில் முந்தமுடியாது என்றாலும் விரைவில் ரோஹித் முந்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.