சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா.

கடுமையான தோல்விக்குப் பிறகு அபரிமிதமாக மீண்டெழுவது ரோஹித்தின் வழக்கம். ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட முறையில் தோல்விக்குப் பிறகு வெகுண்டெழுந்து ருத்ர தாண்டவம் ஆடுபவர் ரோஹித். அப்படியாகத்தான் மூன்று இரட்டை சதங்களை குவித்து வைத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அப்படித்தான். டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரோஹித், முதல் 4 ஒருநாள் போட்டிகளில் சேர்த்தே 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

ஆனால் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். எனினும் அன்றைய தினம், சதத்திற்கு பிறகு ரோஹித்திடமிருந்து பெரிய இன்னிங்ஸை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 115 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 

ஹிட்மேன் என வர்ணிக்கப்படும் ரோஹித், சிக்ஸர்களை அசால்டாக அடிப்பதில் வல்லவர். அப்படித்தான் கடந்த போட்டியிலும் 4 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

சச்சின், கங்குலி போன்ற வீரர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி இந்த இடத்தை ரோஹித் பிடித்துள்ளார். 24 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 264 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சிக்ஸர்களை விளாசுவதில் கைதேர்ந்தவரான முன்னாள் கேப்டன் கங்குலி, 424 சர்வதேச போட்டிகளில் 247 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ஆனால் வெறும் 275 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 265 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசியதன்மூலம் அவர், சச்சின், கங்குலியை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டார்.

தற்போதுவரை, 331 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்திலும் 265 சிக்ஸர்களுடன் ரோஹித் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.