ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணி என்பதால் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று பரவலாக கருத்து இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதில் தாரைவார்த்துவிடவில்லை. 

முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேர பரபரப்பில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

அடிலெய்டு டெஸ்டில் காயமடைந்ததால் ரோஹித் சர்மாவும் அஷ்வினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் உள்ளனர். ரோஹித் சர்மா களமிறங்கிய 6ம் வரிசையில் ஹனுமா விஹாரி களமிறக்கப்படுவார். 

அதேநேரத்தில் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகிய மூவரும் ஆடிய நிலையில், அடுத்த போட்டியில் இவர்களுடன் உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.