ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 443 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 8 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் புஜாராவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் மயன்க் அகர்வால், அறிமுக போட்டியிலேயே 76 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.

பின்னர் புஜாரா - கோலி அனுபவ ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்றைய ஆட்டம் தொடங்கியதும் டெஸ்ட் அரங்கில் 17வது சதத்தை பூர்த்தி செய்தார் புஜாரா. கோலி 82 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து புஜாராவும் 106 ரன்களில் நடையை கட்டினார். ரஹானே 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இன்றைய ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்ட தொடங்கியதும் ரோஹித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் அடித்து ஆடினர். ஆனால் அடித்து ஆட தொடங்கியதுமே ரிஷப் பண்ட், 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து, இரண்டாவது பந்திலேயே அவுட்டாக, இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை எடுத்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கேப்டன் கோலி.