வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிரன் பவல் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இதையடுத்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடிய ஹெட்மயர் சிக்ஸர்களாக விளாசி சதமடித்தார். சதமடித்ததுமே 106 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். பின்வரிசை வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்ததால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 322 ரன்களை குவித்தது.

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இரண்டாவது ஓவரிலேயே வெறும் 4 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். கோலி அடித்து ஆட, ரோஹித் மறுமுனையில் நிதானமாக ஆடினார்.

இருவருமே விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அபாரமாக ஆடி சதமடித்தனர். கோலி முதலில் சதமடிக்க, பிறகு ரோஹித்தும் சதமடித்தார். கோலி தனது 36வது சதத்தையும் ரோஹித் 20வது சதத்தையும் பூர்த்தி செய்தனர். 140 ரன்களுக்கு கோலி ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். ஆனால் ரோஹித் சர்மா நிதானமாக ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். ரோஹித் மற்றும் கோலியின் அபாரமான ஆட்டத்தால் 42 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 முன்னிலை வகிக்கிறது.