இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், உலகின் 49-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச் ஆகியோர் மோதுகின்றனர்.

அமெரிக்காவில் நடைபெறும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஃபெடரரும், தென் கொரியாவின் சங் ஹியோனும் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் ஃபெடரர் 7-5, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

ஹியோனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே முறை மட்டும் டபுள் ஃபால்ட் செய்த ஃபெடரர், ஹியோனின் சர்வ்களை 4 முறை பிரேக் செய்தார். இந்த ஆட்டத்தில் மொத்தம் 12 ஏஸ்களை பறக்கவிட்ட ஃபெடரர், 2-வது மேட்ச் பாய்ண்டில் கடைசி ஏûஸ விளாசி வெற்றியை தனதாக்கினார்.

அரையிறுதியில் ஃபெடரர் வெல்லும் பட்சத்தில், தனது டென்னிஸ் வரலாற்றில் ஒரு சீசனில் அதிகபட்ச வெற்றிகளுடன் தொடங்கிய பெருமையை பெறுவார். இதனிடையே, இந்தக் காலிறுதி வெற்றியின் மூலமாக ஃபெடரர் தனது நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதேபோல், மற்றொரு காலிறுதியில் போர்னா கோரிச் 2-6, 6-04, 7-6(7/3) என்ற செட்களில் உலகின் 7-ஆம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார். இத்துடன் கெவினுக்கு எதிராக 4 முறை மோதியுள்ள கோரிச், தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், உலகின் 49-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச் ஆகியோர் மோதுகின்றனர்.