Roger Federer advanced to quarterfinals
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபரை 7-6(10-8), 7-5 என்ற செட்களில் வென்றார்.
இதனையடுத்து தனது காலிறுதியில் அவர் நெதர்லாந்தின் ராபின் ஹசியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் ராபின் ஹசீ 6-4, 6-0 என்ற செட்களில் சகநாட்டவரான டாலன் கிரீக்ஸ்பூரை வீழ்த்தியிருந்தார்.
ஃபெடரர் இந்தக் காலிறுதி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில், நடாலை பின்னுக்குத் தள்ளி உலகின் முதல் நிலை வீரராக மீண்டும் உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அந்த இடத்துக்கு வரும் அவர், ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதலிடம் பிடிக்கும் மிக வயதான வீரர் (36) என்ற பெருமையையும் பெறுவார்.
மற்றொரு காலிறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின், போட்டித் தரவரிசையில் 6-ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதுவதாக இருந்தது.
இதில் தாமஸ் பெர்டிச் விலகியதை அடுத்து, டேவிட் காஃபின் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரு ருபலேவை வீழ்த்தினார்.
