ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தீவிரமாக ஸ்லெட்ஜிங் செய்தார். பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் தான் எதிரணி வீரர்களை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் இந்த போட்டியில் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் செயல்பட்டார் ரிஷப் பண்ட்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். ஆனால் அதை ரிஷப் பண்ட் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, அந்த அணியின் நட்சத்திர வீரர் கவாஜாவை சீண்டினார் ரிஷப் பண்ட். எல்லாரும் புஜாரா ஆகிவிட முடியாது என்று கவாஜாவிடம் தெரிவித்து சீண்டிவிட்டார் ரிஷப்.

பின்னர் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, கம்மின்ஸை சீண்டினார் ரிஷப். தோல்வியை தவிர்க்க போராடிக்கொண்டிருந்த கம்மின்ஸிடம், இங்கு பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல என்று சீண்டினார். 

இவ்வாறு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அவ்வப்போது இந்திய அணியின் நெருக்கடியான சூழல்களில் எல்லாம் சீண்டிக்கொண்டே இருந்தார் ரிஷப் பண்ட். எதிரணி வீரர்களை வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தும் ஸ்லெட்ஜிங் என்ற ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே அருமையாக பயன்படுத்தினார் ரிஷப் பண்ட்.