ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணி வீரரையே செம மாஸாக வம்புக்கு இழுத்துள்ளார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே பரபரப்புக்கும் மோதலுக்கும் பஞ்சமே இருக்காது. எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்த நினைப்பது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்று. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே முட்டும் மோதலுமாக இருக்கும். 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சற்றும் சளைக்காத சண்டக்கோழி நம்ம கேப்டன் கோலி. எனவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடியே தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலி அளித்த பேட்டி, ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் எகிறவிட்டது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு, ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் மீட்டெடுப்பதற்காக முன்புபோல் ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அடையாளமான ஸ்லெட்ஜிங்கை விட்டுவிடக்கூடாது என்று பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்தனர். 

இவ்வாறாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பெரும் கவனத்தை ஈர்த்தது ஸ்லெட்ஜிங் குறித்த விஷயம்தான். இப்படியான சூழலில் உங்களுக்கு மட்டும்தான் வம்பு இழுக்க தெரியுமா? எங்களுக்குலாம் தெரியாதா? என்ற ரீதியாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரை சீண்டியுள்ளார் ரிஷப் பண்ட். 

இந்திய அணியின் இன்னிங்ஸின் போது ரிஷப் பண்ட்டை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்து சீண்டி பார்த்தார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ். ஆனால் ரிஷப் பண்ட் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவேயில்லை. 

இந்நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸின் போது, ஒருமுனையில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் உஸ்மான் கவாஜா நிலைத்து நின்று ஆடினார். 100க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு இருபதுகளில்தான் ரன்கள் எடுத்தார் என்றாலும் வலுவான பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க முயன்றார். மிகவும் நிதானமாக ஆடினார். 

அப்படியான சூழலில், அவர் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, கவாஜாவிடம், எல்லாரும் புஜாரா ஆகிவிட முடியாது என்று அவரை சீண்டும் விதமாக பேசியுள்ளார். ரிஷப் பண்ட் இவ்வாறு கூறியது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் பதிவானது. ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போனது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் நட்சத்திர வீரரையே மிரளவிட்டுள்ளார் ரிஷப் பண்ட்.