இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான ரிஷப் பண்ட், மோசமான சாதனை ஒன்றை ரெய்னா மற்றும் இர்ஃபான் பதானுடன் பகிர்ந்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் ரிஷப் பண்ட், சிக்ஸருடன் ரன் கணக்கை தொடங்கி மிரட்டினார். இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை.

தற்போது சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி புஜாராவின் அபார சதத்தால் 273 ரன்கள் எடுத்தது. ரிஷப் அறிமுகமான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் இந்த இன்னிங்ஸில் 29 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் ரெய்னா மற்றும் இர்ஃபான் பதானுடன் இணைந்துள்ளார். 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதானும் 2011ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரெய்னாவும் 29 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் அவுட்டாகினர். அதே 29 பந்துகளில் ரன் எடுக்காமல் அவுட்டாகி, இர்ஃபான் பதான், ரெய்னாவுடன் ரிஷப் பண்ட்டும் இணைந்துள்ளார்.