பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் சேர்க்கப்படாததற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) நடைபெற உள்ளது. அதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சேர்க்கப்படவில்லை. 

ஆனால், ஆரோன் ஃபின்ச்சுக்கு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவருகிறார். எனினும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேபோல, இந்தியாவில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகிய வீரர்களுக்கும் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016ம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய பீட்டர் சிடிலுக்கு கூட அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேக்ஸ்வெல்லுக்கு அளிக்கப்படவில்லை. 

எனவே மேக்ஸ்வெல் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருதுகிறார் என்பது அவரது பேச்சின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரிக்கி பாண்டிங், மேக்ஸ்வெல் இந்திய துணைக்கண்ட சூழலில் எப்படி ஆடுவார் என்பது தெரியும் என்றுகூறி அவருக்கு ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் என்ன சொல்ல வருகின்றனர்..? இனிமேல் மேக்ஸ்வெல்லுக்கு அணியில் இடமில்லை என்று மறைமுக செய்தி சொல்கிறார்களா? என்று பாண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.