Asianet News TamilAsianet News Tamil

மோதிர கையால் குட்டு வாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர்!! இதைவிட ஷ்ரேயாஸுக்கு வேற என்ன வேணும்..?

ricky ponting praised shreyas iyer captaincy
ricky ponting praised shreyas iyer captaincy
Author
First Published May 21, 2018, 4:59 PM IST


டெல்லி அணி கேப்டனும் இளம் வீரருமான ஷ்ரேயாஸ் ஐயரை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத டெல்லி அணி, இந்த முறையாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் அந்த அணியின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.

14 லீக் போட்டிகளில் 5ல் வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இந்த சீசனின் தொடக்கம் டெல்லி அணிக்கு சரியாக அமையவில்லை. கவுதம் காம்பீரின் கேப்டன்சியில் ஆடிய முதல் 6 போட்டிகளில் 5ல் டெல்லி அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டிகளில் காம்பீர் பேட்டிங்கும் சரியாக ஆடவில்லை. அதனால் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்த காம்பீர், தனது ஊதியத்தையும் விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை.

காம்பீர் விலகிய பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றார். தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு இளம் வீரர் பிரித்வி ஷாவிற்கு கிடைத்தது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் 8 போட்டிகளில் ஆடி டெல்லி அணி 4ல் வெற்றி பெற்றது. ஆனாலும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறமுடியவில்லை. மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில், மும்பையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்கவும், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக பதவி ஏற்கவும் வாய்ப்பளித்தது. தொடரின் இடையில் கேப்டன் பதவியை ஏற்று செயல்படுவது கடினமானது. கேப்டன் பதவியின் சவால்களை ஷ்ரேயாஸ் ஐயர் திறமையாக எதிர்கொண்டார். அவர் அபாயகரமான இளம் வீரர். எதிர்காலத்தில் அவர் அதிகமான கேப்டன் பதவிகளில் பொறுப்பேற்றால், எனக்கு அது ஆச்சரியமாக இருக்காது என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு பட வேண்டும் என்பார்கள். அதற்கேற்றவாறு, இரண்டு உலக கோப்பைகளை வென்று, 10 ஆண்டுக்கும் மேலாக தனது தலைமையிலான அணியை எதிரணிகளால் எளிதாக வீழ்த்த முடியாத அளவிற்கு வலுவான அணியை வைத்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பாராட்டையே ஷ்ரேயாஸ் பெற்றுவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரிக்கி பாண்டிங்கின் பாராட்டு, கண்டிப்பாக மிகப்பெரிய விஷயம் தான். 

Follow Us:
Download App:
  • android
  • ios