இலங்கைக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி-20 தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டு உள்ளார். 

இவர் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் தற்காலிக உதவி பயிற்சியாளர் ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரிக்கி பான்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்ற மூன்று முறையும் அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.

இவர் இதற்கு முன்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

தனது நியமனம் குறித்து பான்டிங் கூறுகையில், 'நல்ல திறமைகள் கொண்ட வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். அதை சிறந்த முறையில் வெளிக் கொணர என்னால் இயன்ற வகையில் உதவுவேன்' என்று தெரிவித்தார்.