இந்திய அணியின் மாபெரும் சக்தியாக மட்டுமல்லாமல் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வளர்ந்து நிற்கும் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி வீழ்த்த வேண்டும் என்ற முழு திட்டத்தையும் வகுத்து கொடுத்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள்(6ம் தேதி) தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர்.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று உத்வேகத்தை பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி, தொடரின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது சிறப்பாக ஆடிய விராட் கோலி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தபோது பெரிதாக சோபிக்கவில்லை. எனினும் தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் கோலி, நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அவர் ரன்களை குவிப்பது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாக திகழும். 

விராட் கோலி தான் இந்திய அணியின் முடிவை தீர்மானிக்கும் சக்தி என்பதால், அவரை வீழ்த்துவதற்கு அந்த அணியினர் பல்வேறு திட்டங்களை வகுத்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் நீண்டகால வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். இரண்டு உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்த பாண்டிங், தான் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை மற்ற அணிகள் நெருங்கக்கூட முடியாத சக்தியாக வைத்திருந்தார். தற்போது விராட் கோலியை வீழ்த்த அவர் கூறியிருக்கும் ஆலோசனையை படித்தால், அவர் எப்படி அப்படி ஒரு சக்தி வாய்ந்த அணியாக ஆஸ்திரேலிய அணியை நீண்டகாலமாக வைத்திருந்தார் என்பது உங்களுக்கு புரியும். 

ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரிக்கி பாண்டிங், விராட் கோலியை வீழ்த்துவதற்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், முதலில் கடந்த காலத்தில் விராட் கோலியை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி விக்கெட்டை வீழ்த்திய பவுலர் யார் என்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கப்போனால் விராட் கோலிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவர்தான் விராட் கோலிக்கு எதிராக சிறந்த சக்ஸஸ் ரேட் வைத்திருப்பவர். ஆனால் இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும். அதனால் ஆண்டர்சன் கோலியை படுத்தி வைத்துள்ளார். ஆனால் பந்துகள் ஸ்விங் ஆகவில்லையெனில் கோலியை வீழ்த்துவது கடினம். அவர் சுதந்திரமாக ரன்களை எடுக்க விரும்பும் ஈகோவுள்ளவர். அதனால் அவரை தொடக்கத்திலேயே பவுண்டரிகள் அடிக்கவிடாமல் பவுண்டரி லைனில் சில ஃபீல்டர்களை போட்டு கட்டுப்படுத்த வேண்டும். தொடக்கத்திலேயே கோலியிடம் ஆக்ரோஷம் காட்டாமல் அவரை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த வேண்டும்.

தேர்டுமேன் திசையில்தான் அவர் பந்துகளை தட்டிவிட்டு அதிகமாக ரன் எடுக்கிறார். எனவே வெவ்வேறு இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி நாம் அவரை வீழ்த்த ஏதோ செய்கிறோம் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்த வேண்டும். அவர் கையை தளர்வாக்கி பந்துகளை திருப்பிவிடுவார். அதனால் மூன்றாவது ஸ்லிப்பை நெருக்கமாக நிறுத்தி, அவர் என்ன செய்தாலும் அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.

விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டாம் என்று நான் கூறமாட்டேன். ஆனால் எப்போது ஸ்லெட்ஜிங் செய்கிறோம் என்பது மிக முக்கியம். முதலில் பவுலிங்கில் அவருக்கு தொந்தரவு கொடுத்துவிட்டு பின்னர் அவரை நோக்கி சில வார்த்தைகளை வீசுங்கள். மிட்செல் ஜான்சன் சிலமுறை கோலியை வெறுப்பேற்றி வெற்றி கண்டிருக்கிறார். நாம் நமது பாணி ஆட்டத்தையே ஆடுவோம். யார் கிண்டல் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. அவர்கள் தான் நம் நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். நாம் உள்நாட்டில் ஆடுகிறோம். எனவே உங்கள் திறமை, செயல்கள் ஆகியவற்றுடன் கொஞ்சம் வம்பிழுப்பதும் கோலியை நிலைகுலைய செய்யும் என்று பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

ஒரு அணியின் நட்சத்திர வீரராகவும், அந்த அணி எந்த வீரரை சார்ந்திருக்கிறதோ அந்த வீரருக்கு எதிராக இவ்வளவு சிறப்பாக வியூகங்களை வகுத்ததாலும்தான் ரிக்கி பாண்டிங்கால் சிறந்த கேப்டனாக 10 ஆண்டுகளாக நீடிக்க முடிந்தது. அவரது அணியையும் நம்பர் 1 அணியாக வைத்திருக்க முடிந்தது.