கிரிக்கெட்டில் பொதுவாகவே எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடும் ஆஸ்திரேலிய அணி, எல்லா காலக்கட்டத்திலும் வெற்றிகரமான அணியாகவே திகழ்ந்துள்ளது. 

5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னரின் தடைக்கு பிறகு அந்த அணி பாதாளத்திற்கு சென்றது.  இங்கிலாந்திடம் 5-0 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது, பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது என தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணியை துவண்டு போக செய்துள்ளது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தன்னம்பிக்கையிழந்து காணப்படுகிறது. இந்நிலையில், அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்து உலக கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதமாக உலக கோப்பை தொடருக்கு ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். 

ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங்கின் தலைமையில் 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமாக கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணியை சர்வதேச அளவில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக வைத்திருந்தவர் ரிக்கி பாண்டிங். ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்திருப்பது அந்த அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். 

உலக கோப்பையை 2 முறை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருப்பதால், உலக கோப்பையில் ஆடும் உத்திகளையும் போட்டிகளை வெல்லும் நுணுக்கங்களையும் அவர் அளிப்பார். இது அந்த அணிக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.