அம்பாதி ராயுடு யோ யோ டெஸ்டில் தேர்வாகி ஆசிய கோப்பையில் மீண்டும் இந்திய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராயுடு அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்று ஆடினார். ஆசிய கோப்பை தொடரில் கிடைத்த வாய்ப்பை ஓரளவிற்கு பயன்படுத்திக்கொண்டார். அதுவும் கோலியின் மூன்றாமிடத்தில் களமிறங்கிய ராயுடு, சவாலான அந்த காரியத்தை ஓரளவிற்கு சிறப்பாகவே செய்தார்.

ஆசிய கோப்பையில் 6 போட்டிகளில் 43 சராசரியுடன் 175 ரன்களை சேர்த்தார். ஆசிய கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் தொடக்க வீரர்களே சிறப்பாக ஆடிவிட்டதால், இக்கட்டான நிலையில் ராயுடு களமிறங்கவில்லை. எல்லா போட்டிகளிலுமே அணி நல்ல நிலையில் இருக்கும்போதுதான் களமிறங்கினார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற ராயுடு, அதிலும் அரைசதம் அடித்தார்.

இவ்வாறு ஆசிய கோப்பையில் நன்றாக ஆடிய ராயுடு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் ஆடும் நம்பிக்கையில் உள்ளார். கிடைக்கும் வாய்ப்புகளையும் இந்திய அணியில் மிடில் ஆர்டர் தேவையையும் பயன்படுத்தி நன்றாக ஆடி உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் ராயுடு. 

இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் ராயுடு ஹைதராபாத் அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்த்தால், அவர் ஆடவில்லை. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் அனைத்துவிதமான அணிகளுக்கும் கேப்டனாக ராயுடு உள்ளார். ஆனால் விஜய் ஹசாரே தொடரில் ராயுடு ஆடவில்லை. ஆசிய கோப்பை தொடர் முடிந்து திரும்புவது குறித்தும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு ராயுடு தகவல் தெரிவிக்கவில்லை. விஜய் ஹசாரேவில் ஆடாதது குறித்தும் எதுவும் தகவல் சொல்லவில்லை என ஹைதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷே நாராயண் தெரிவித்துள்ளார்.