இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கிரிக்கெட்டிற்கும் சினிமாவிற்கும் இடையேயான திருமண உறவு தொடர்ந்து கொண்டே வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளை திருமணம் செய்துகொள்வது தொடர்கதையாகிவருகிறது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு முன்னதாக ஜாகீர் கான் பாலிவுட் நடிகை சாகரிகா காட்ஜையும் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவையும் திருமணம் செய்துகொண்டனர். யுவராஜ் சிங் பாலிவுட் நடிகை ஹசல் கெச்சை மணந்தார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியுடன் நடிகை நக்மா இணைத்து பேசப்பட்ட காலமும் உண்டு. அதன்பிறகு முன்னாள் கேப்டன் தோனிக்கும் நடிகை ராய் லட்சுமிக்கும் காதல் என பேசப்பட்டது. கங்குலி நக்மாவுடனும், தோனி ராய் லட்சுமியுடனும் டேட்டிங் செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. 

அண்மையில் கேஎல் ராகுல், நடிகை நிதி அகர்வாலுடன் வெளியே சென்ற புகைப்படம் வைரலானது. ஆனால் அவர்கள் இருவரும் சிறுவயது நண்பர்கள் என தெளிவுபடுத்தினர். 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்துவருவதாகவும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிசியான கால அட்டவணைகளுக்கு இடையேயும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்ய தவறுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 1980களில் நடிகை அம்ரிதா சிங்குடன் ரவி சாஸ்திரி இணைத்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.