வங்கதேசத்தை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 14வது ஆசிய கோப்பை தொடரில் கடைசி லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், நேற்று மோதின. 

அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜனத் 8 ரன்களிலும் ஷேஷாத் 37 ரன்களிலும் அவுட்டாகினர். ரஹ்மத் ஷா 10 ரன்களுக்கும் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடி அரைசதம் கடந்த ஷாகிடியும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷென்வாரி 18 ரன்கள் மற்றும் முகமது நபி 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 41 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. 7 விக்கெட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நைப் மற்றும் ரஷீத் கான் ஜோடி, கடைசி பத்து ஓவர்களில் வங்கதேசத்தின் பவுலிங்கை அடித்து நொறுக்கியது. 

அதிலும் குறிப்பாக ரஷீத் கானின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அதிரடியாக ஆடிய ரஷீத் கான் கடைசி ஓவரில் அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 57 ரன்களை குவித்தார் ரஷீத் கான். 250 ரன்கள் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஒரு கட்டத்தில் 250 ரன்களை எட்டமுடியாத சூழலில் இருந்தாலும், அணியின் இலக்கை அடைய ரஷீத் கானும் நைபும் அரும்பாடுபட்டனர். அபாரமாக ஆடி கடைசி 10 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 256 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் ஷாண்டோ, லிட்டன் தாஸ், மோமினுல் ஹாக், மிதுன் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகினர். அதனால் வங்கதேச அணி 43 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஷாகிப் அல் ஹாசனும் மஹ்மதுல்லாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட முயன்றனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்த்தது. ஆனால் அவர்கள் இருவரையுமே ரஷீத் கான் தனது சுழலில் வீழ்த்திவிட்டார். பேட்டிங்கில் அசத்திய ரஷீத் கான், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்டு இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்திய ரஷீத், அபுஹைடரை ரன் அவுட் செய்தார். இவ்வாறு மூன்றிலுமே சிறப்பாக செயல்பட்டு அணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் ரஷீத் கான். ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்திலும் அசத்தியது. அதற்கு நேர்மாறாக அனைத்திலும் சொதப்பிய வங்கதேச அணி 119 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி, 136 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.