சீன கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்றார்.

மொத்தம் 20 சுற்றுகளைக் கொண்ட சீன கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தய போட்டியின் இராண்டாவது சுற்று சீன கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் சீனாவின் ஷாங்காய் நகரில் நேற்று நடைபெற்றது.

பெரும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட லீவிஸ் ஹாமில்டன் 1 மணி, 37 நிமிடம், 36.158 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தை எட்டிப் பிடித்தார்.

ஷாங்காய் நகரில் ஐந்தாவது வெற்றியைப் பெற்றுள்ள லீவிஸ் ஹாமில்டன், தனது கார் பந்தய வாழ்க்கையில் ஒட்டு மொத்தமாக 54-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி டிரைவர் செபாஸ்டியன் வெட்டலின் கார் ஆரம்ப சுற்றுகளில் விபத்தில் சிக்கியபோதும், ஹாமில்டனைவிட கூடுதலாக 6.250 விநாடிகளை அபாரமாக செயல்பட்டு 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

ரெட்புல் டிரைவர் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் கூடுதலாக 45.192 விநாடிகள் எடுத்து 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

மற்றொரு ரெட்புல் டிரைவரான டேனியல் ரிச்சியார்டோ கூடுதலாக 46.035 விநாடிகள் 4-ஆவது இடத்தையும், ஃபெராரி டிரைவர் கிமி ராய்க்கோனென் கூடுதலாக 48.076 விநாடிகள் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர்.