ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் - முரளி விஜய் ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த போதிலும், இருவரும் பெரிய இன்னிங்ஸை ஆடாமல் ஆட்டமிழந்தனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி 235 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் முரளி விஜயும் முதல் இன்னிங்ஸை போல அவசரப்படாமல் நிதானமாக தொடங்கினர். முதல் 9 ஓவர்களுக்கு மிகவும் பொறுமையாக ஆடினர். அதன்பிறகு ராகுல் அடித்து ஆட தொடங்கினார்.

தான் தொடர்ந்து சரியாக ஆடாவிட்டாலும் தன்னை ஏன் அணியில் வைத்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் விதமாக சில அபாரமான ஷாட்களை ஆடினார். கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோரின் பந்துகளில் சில அற்புதமான கவர் ஷாட்டுகளையும் நாதன் லயனில் ஸ்பின்னில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டும் ஆடி மிரட்டினார். 

ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ராகுல் ஆதிக்கம் செலுத்தி ஆடிக்கொண்டிருக்க, முரளி விஜய் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ராகுலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல், ஹேசில்வுட்டின் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ராகுலும் முரளி விஜயும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். தற்போது புஜாராவும் கோலியும் ஆடிவருகின்றனர். மூன்றாம் நாளான இன்று, டீ பிரேக் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 86 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியை 101 ரன்கள் முன்னிலையுடன் ஆடிவருகிறது.