வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து சொதப்புவதற்கான காரணத்தை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, ஆசியாவிற்குள் நடக்கும் தொடரில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால் ஆசியாவிற்கு வெளியே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்புகிறது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்திலும் 4-1 என டெஸ்ட் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது. மற்ற 4 போட்டிகளிலும் தோற்றுவிட்டது. 

இங்கிலாந்தில் விராட் கோலியை தவிர மற்ற எந்த வீரரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பும் இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடும் இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு வெளியே சொதப்புவதற்கு என்ன காரணம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 

ராகுல் டிராவிட் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் உலகம் முழுவதிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தவர். இந்திய அணிக்கு பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். அதனால் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்கு திறமையான இளம் வீரர்களை உருவாக்கி கொடுக்கும் முக்கியமான பணியை செய்துவருகிறார். ராகுல் டிராவிட்டின் பேட்டிங் டெக்னிக்கும் ஸ்டைலும் அபாரமானது. அதிக அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட், சில சமயங்களில் இந்திய அணிக்கு வழங்கிய அறிவுரைகளை அணி ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவில்லை. அதனால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிட்டது. 

இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளை போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி ஆட முடியாததற்கான காரணம் குறித்து பேசியுள்ள டிராவிட், இந்திய அணி சிவப்பு பந்துகளில் அதிகமான பயிற்சியை மேற்கொள்ளாததே டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புவதற்கு காரணம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அதிகமாக ஆடுவதாலும் வெள்ளை பந்தில் அதிகமாக பயிற்சி எடுப்பதாலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் நன்றாக செயல்படுகின்றனர். சிவப்பு பந்திலும் அதிகமான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் டிராவிட் அறிவுறுத்தியுள்ளார்.