பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தூதராக இந்திய அணி முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 12-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் புது தில்லியிலும், இறுதி ஆட்டம் பெங்களூரிலும் நடைபெற உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நேபாளம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் என 10 நாடுகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டிக்கான ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான தூதராக அறிவிக்கப்பட்டுள்ள திராவிட் புதன்கிழமை கூறியதாவது: பார்வையற்றோர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களிடம், நம்மிடம் இல்லாத வகையிலான தனித்த ஆற்றல்கள் உள்ளன. அவர்கள் போல அதில் என்னால் சிறப்பாக விளையாட இயலாது.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விழிப்புணர்வோ, அதற்கான வாய்ப்புகளோ இல்லாத காரணத்தால் அவை பிரபலமடையவில்லை. எனினும், கடந்த 4 ஆண்டுகளில் அவை வளர்ச்சி பெற்றுள்ளன. பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களின் கையில் உள்ளது என்று திராவிட் கூறினார்.
