Rahane Remove from the Test team? Are omnipresent - Darko categorically
டெஸ்ட் அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஹானேவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அஜிங்க்ய ரஹானேவுக்கு இங்கிலாந்து தொடர் சிறப்பானதாக அமையவில்லை. அந்தத் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்காத அவர், காயம் காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டது.
அதேநேரத்தில் அந்தத் தொடரில் ரஹானேவுக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் ரஹானே பெரிதாக எதுவும் எடுக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 204 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அனில் கும்ப்ளே அது தொடர்பாக கூறியதாவது:
“ரஹானேவை நீக்குவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. முந்தைய போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக ரன் குவித்திருக்கிறார்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஹானேவை நீக்குவது தொடர்பாக இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. 16 வீரர்களுமே தயார் நிலையில் இருக்கிறார்கள்.
கருண் நாயர் முச்சதம் அடித்த பிறகும்கூட அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானதாகும். 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதால் அவரை அணியில் சேர்க்க முடியவில்லை.
ஆனால் அணியில் அவரைப் போன்ற மாற்று வீரர்கள் இருப்பது மிக நல்ல விஷயமாகும்.
தற்போதைய அணியில் இருக்கும் அனைவருமே வெற்றிகரமான வீரர்கள்தான். யார் களமிறங்கினாலும் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பது மிக அழகான விஷயமாகும்.
அதேநேரத்தில் கூடுதல் பெளலர்களுடன் களமிறங்குகிறபோது நல்ல பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. கருண் நாயர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றுத் தெரிவித்தார்.
