rahane in team instead of rohith in third test match

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.

இந்த இரண்டு போட்டிகளிலும் கேப்டன் கோலியின் அணி தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்நிய மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் ரஹானேவுக்கு பதிலாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சிறந்த ஓவர்சீஸ் வீரரும் டெஸ்ட் போட்டியின் துணை கேப்டனுமான ரஹானேவை சேர்த்திருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. ஆனால், முதல் போட்டியில் தோற்ற பிறகும் இரண்டாவது போட்டியிலும் ரஹானேவை சேர்க்கவில்லை. பெரிதும் நம்பி களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா, இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டிய புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்டில் இஷாந்த் சர்மாவை சேர்த்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானேவும் அஸ்வினுக்குப் பதிலாக புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக பார்திவ் படேலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்திவே இந்த போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

புவனேஷ்வர் குமார், பும்ரா, சமி, இஷாந்த் சர்மா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 5 வேகப்பந்துவீச்சாளர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணியின் உத்தி, எந்த அளவுக்கு பலனளிக்கிறது என்பதை பார்ப்போம்.

மூன்றாவது டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர்கள்:

முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்கிய ரஹானே, பார்த்திவ் படேல்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, பும்ரா.