Rafael Nadal withdraws from the competition without playing in Paris Masters.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் முழங்கால் காயம் காரணமாக அந்தச் சுற்றில் விளையாடாமலேயே போட்டியிலிருந்து விலகினார்.

உலகின் முதல் நிலை வீரரான நடால், போட்டியிலிருந்து விலகுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது:

“காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இரண்டாவது செட்டை எதிர்கொண்டபோது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அப்போது, முதலுதவி சிகிச்சை பெற்று ஆட்டத்தை தொடர்ந்தேன். கடுமையான வலி இருந்தபோதும், அதைப் பொருள்படுத்தாமல் தொடர்ந்து விளையாடினேன். போட்டி முடிந்த பிறகு, சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

காலிறுதியில் கிரஜினோவிச்சை சந்திக்க தயாராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். சில சமயங்களில் சீசன் முடிவடையும் வேளையில், இதுபோன்ற சம்பவம் நேரிடுவது வழக்கமான ஒன்றுதான். முழங்கால் வலியுடன்தான் கடந்த சில ஆண்டுகளாக போட்டிகளில் பங்கெடுத்து வருகிறேன்.

இந்த மாத இறுதியில் லண்டனில் நடைபெற உள்ள டென்னிஸ் போட்டியில் பங்கேற்பது குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. தற்போதைய நிலையில் சிகிச்சையில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.