பெரும் சரிவில் இருந்து மீண்டு சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்.

கடந்த மூன்று ஆண்டுகளில் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்தார் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்.

2017-ஆம் ஆண்டு சீசனில் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நேற்று வெளியானது. இதன்படி நடால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஸ்விட்சர்லாந்து வீரர்களான ரோஜர் ஃபெடரர் மூன்றாம் இடத்திலும், ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் உள்ளனர்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிரிகோர் டிமிட்ரோவ் 9-வது இடத்தில் உள்ளார்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ருமேனியாவின் சைமோனா ஹேலப் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உக்ரைனின் ஸ்விட்டோலினா 4-வத் இடத்திலும், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 5-வது இடத்திலும் உள்ளனர்.