இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியின் 4-வது சீசனில் சென்னை எஃப்.சி அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட இருக்கிறார் ரஃபேல் அகஸ்டோ.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 4-வது சீசனில் விளையாடவுள்ள சென்னையின் எஃப்.சி. அணி, பிரேசிலைச் சேர்ந்த மிட்பீல்டரான ரஃபேல் அகஸ்டோவுடன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி செய்தியாளர்களிடம் கூறியது:

“உதவிப் பயிற்சியாளர் சபீர் பாஷா, ரஃபேலின் திறமை குறித்து என்னிடம் கூறினார். ஐஎஸ்எல் போட்டியின் தலைசிறந்த மிட்பீல்டர்களில் ஒருவராக ரஃபேல் திகழ்கிறார். அவருக்கு 26 வயதுதான் ஆகிறது. அதனால் அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

ரசிகர்கள் விரும்புகிற வீரராக ரஃபேல் திகழ்வதாக கேள்விப்பட்டேன். அதுபோன்ற ஒரு வீரர் எங்கள் அணிக்கு மிக முக்கியம்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து ரஃபேல் கூறியது:

'மீண்டும் சென்னை அணிக்காக சென்னை ரசிகர்களின் மத்தியில் விளையாடவிருப்பதால் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. சென்னை அணிக்காக மறக்க முடியாத இரு சீசன்களை ஏற்கெனவே விளையாடியிருக்கிறேன்.

2015-ல் சாம்பியன் பட்டம் வென்றோம். ஆனால் கடந்த முறை நாங்கள் எதிர்பார்த்த நிலையை அடைய முடியவில்லை. சென்னை அணிக்கு மீண்டும் கோப்பையை வென்று தருவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.