இந்திய கேப்டன் விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் சாதனை நாயகனாக திகழ்கிறார். தனிப்பட்ட முறையில் சாதனைகளை குவிப்பதோடு கேப்டனாக அணிக்கும் வெற்றிகளை குவித்து வருகிறார்.

சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, விரைவில் சச்சினின் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது வெளிநாட்டு தொடர்களிலும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார். கோலி தலைமையிலான இந்திய அணி, அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

2019 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமகாலத்தில் சிறந்த வீரர் கோலி தான் எனவும் பல ஜாம்பவான்கள் புகழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வில் கோலி குறித்த கேள்வியைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியடைந்தனர். அதுவும் 10 மதிப்பெண் கேள்வி. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கேள்வி கேட்கும் அளவிற்கு கோலியின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது.

கோலி குறித்த கேள்வி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள், தேர்வில் கோலி குறித்த கேள்வி கேட்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. அவர் இந்தியாவின் ஓர் அடையாளம். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர். கோலி குறித்து கேள்வி கேட்கப்பட்டது மகிழ்ச்சி. கேள்வியிலேயே சில தகவல்கள் இருந்ததால் பதில் எழுதுவதற்கு அவ்வளவு சிரமமானதாக இல்லை என தெரிவித்தனர்.