பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்திய ரஷிய கர்லிங் விளையாட்டு வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கியின் பதக்கம் பறிக்கப்பட்டது.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்றுள்ள ரஷிய கர்லிங் விளையாட்டு வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கி ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கர்லிங் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் அலெக்ஸாண்டர் தனது மனைவி அனஸ்தாசியா பிரைஸ்காலோவாவுடன் இணைந்து வென்ற வெண்கலப் பதக்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2014 சோச்சி ஒலிம்பிக்கின்போது அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ரஷிய வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷிய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

எனினும், கடும் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட 168 ரஷிய வீரர்/வீராங்கனைகள் மட்டும் பொதுவான வீரர்களாக பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், கர்லிங் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அலெக்ஸாண்டர், 'மெல்டோனியம்' வகை ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தக் குற்றச்சாட்டை அலெக்ஸாண்டர் மறுத்தபோதும், அவர் உண்மையை மறைப்பதாக அதிகாரிகள் தரப்பில் கண்டறியப்பட்டது. இச்சூழலில், அலெக்ஸாண்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்டதாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து போட்டியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அலெக்ஸாண்டரின் வெண்கலப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பதக்கத்துக்கான போட்டியில் அலெக்ஸாண்டர் - அனஸ்தாசியா ஜோடியிடம் வீழ்ந்த நார்வேயின் கிறிஸ்டின் ஸ்காஸ்லியன் - மேக்னஸ் நெட்ரெகாட்டன் ஜோடிக்கு அந்தப் பதக்கத்தை வழங்கபடுகிறது.