23-வது பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தன.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வந்த 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தன.

கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் நார்வே 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

கனடா 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.

போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-வது இடம் பிடித்தது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார்.

இறுதியில் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதாக அறிவித்தார்.