punjab worst defeat in this ipl season
பெங்களூரு அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியுள்ளது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் சீசனின் மோசமான தோல்வி இதுதான்.
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 48வது லீக் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கும் கெய்ல் மற்றும் ராகுலை சொற்ப ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 5 ஓவருக்கு உள்ளாகவே கெய்ல் மற்றும் ராகுலை வீழ்த்திவிட்டார் உமேஷ் யாதவ். அதன்பிறகு களமிறங்கிய கருண் நாயர், மயன்க் அகர்வால், ஃபின்ச், அக்ஸர் படேல், ஸ்டோய்னிஸ், அஷ்வின், ஆண்ட்ரூ டை ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, பஞ்சாப் அணி 15.1 ஓவருக்கே 88 ரன்களில் ஆல் அவுட்டானது.
89 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் பார்த்திவ் படேலுமே எளிதாக இலக்கை எட்டிவிட்டனர். விக்கெட்டை இழக்காமல் 8.1 ஓவருக்கே இலக்கை எட்டி பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியதால், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியின் இந்த தோல்வியே இந்த சீசனின் மோசமான தோல்வி. இதற்கு முன், 119 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் ஹைதராபாத்திடம் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மோசமான தோல்வியாக இருந்தது.
